Saturday, February 15, 2014

"ஆம் ஆத்மி" இனி...

"ஆம் ஆத்மி", கடந்த சில மாதங்களாக இந்திய அரசியல் களத்தில் எல்லோரையும் லேசாக பதட்டப்பட வைத்த பெயர்.
ஊழலுக்கு எதிராக "ஆம் ஆத்மி" கையிலெடுத்த துடைப்பம் அவர்களை பரவலாக நாடறியச் செய்தது.இதற்கு முன்னர் இரண்டு முறை ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் நடத்தப்படிருக்கின்றன.

70களில் இந்திரா காந்தியின் அரசாங்கத்திற்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டம் மக்கள் போராட்டமாக உருப்பெற்று இந்திராவை ஆட்சியிலிருந்து அகற்றியது.80களின் இறுதியில் ராஜீவ் காந்தி அரசாங்கத்திற்கு எதிராக வி.பி.சிங் நடத்திய போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுக்கவில்லை என்றாலும் ராஜீவ் காந்தியை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதைத் தொடர்ந்து  "ஆம் ஆத்மி" கட்சி காங்கிரசின் ஊழலை தொடர்ந்து அம்பலப்படுத்தி ஊழலுக்கு எதிராக துடைப்பம் ஏந்தி தேர்தலில் போட்டியிட்டு டில்லியில் காங்கிரசை தோற்கடித்து இரண்டாமிடம் பிடித்தது.பின்னர் தான் எதிர்த்த காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியையும் அமைத்தது.

புதியதாக தொடங்கப்பட்ட கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பது புதிதில்லை என்றாலும் இந்தியாவின் தலைமையான "டெல்லியைக்" கைப்பற்றி எல்லா அரசியல் கட்சிகள் வயிற்றிலும் புளியைக் கரைத்து மக்கள் முன்னிலையில் "சூப்பர் ஹீரோவாக" "மக்கள் காவலனாக"  உயர்ந்தது.
ஆட்சி அமைத்து 49 நாட்கள் முடிந்த நிலையில்  "ஜன்லோக்பால் மசோதா"வை நிறைவேற்ற முடியாததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கெஜ்ரிவால்.

அவர் ராஜினாமா செய்யாவிட்டாலும் "ஆம் ஆத்மி" கட்சியின் ஆட்சி  விரைவில் முடிவுக்கு வந்திருக்கும்.காங்கிரசின் ஆதரவோடு  ஆட்சியமைத்த பின்னரும் கூட "காங்கிரசின்" ஊழலை அம்பலப்படுத்துவதை நிறுத்தவில்லை,எனவே எப்படியும் தான் கொடுத்த ஆதரவை திரும்பப்பெற்று காலை வாரியிருக்கும் காங்கிரஸ்.
கெஜ்ரிவாலின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.

"ஊழல் புரையோடியிருக்கும் காங்கிரசின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருந்தாலும் கூட காங்கிரசின் ஊழலை அம்பலப்படுத்துவதை நிறுத்தவில்லை".இந்த நேர்மையே மக்களை வெகுவாகக் கவர்ந்தது.மேலும் "ஆம் ஆத்மி" கட்சி மக்களின் மத்தியில் பலத்த  வரவேற்பைப் பெறக்காரணம் அதன் வெளிப்படைத் தன்மை மற்றும் அடித்தட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டது தான்.இப்படி இந்திய அரசியல் கட்சிகள் விரும்பாத அல்லது அவர்களுக்கு பழக்கப்படாத பல விஷயங்களை செய்ததால்தான் ஆம் ஆத்மி மக்கள் செல்வாக்கைப் பெற்றது.

அரசியலில் புதுமைகள் செய்து முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்திருந்தாலும் கூட ஆம் ஆத்மி கட்சி பக்கம் சில குறைகள் உள்ளதையும் நாம் மறுக்கவியலாது.டில்லியில் "ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 20,000லி தண்ணீர் இலவசம்"என்பதையும்,"மின்கட்டணத்தைப் பாதியாகக் குறைப்போம்" என்ற வாக்குறுதியையும் அது நிறைவேற்றியிருக்கிறது.இவ்வாறு  வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றுவதால் மக்கள் பிரச்சனைகள் தீரப்போவதில்லை என்றும்,இதற்கு காரணமான தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாகவே இது போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பதையும் ஆம் ஆத்மி புரிந்து கொள்ள வேண்டும்.அதாவது "மற்ற கட்சிகளைப் போல பிரச்சனைக்கான தற்காலிக தீர்வுகளை வழங்காமல்,அதன் ஊற்றுக் கண்களை ஆராய்ந்து அழித்தல் வேண்டும்".
மேலும் சாமானிய மக்களுக்காக போராடும் ஆம் ஆத்மி கட்சியில் இருப்பதோ ஏர் டெக்கன் நிறுவனர் கேப்டன் கோபிநாத்,ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லான்ட் இந்தியா பிரிவின் முன்னாள் தலைவர்  மீரா சன்யால்,இன்போசிஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் வி.பாலகிருஷ்ணன் போன்ற "பெரும் தலைகள்"தான்.சாமானிய மக்களையும் பங்கெடுக்கச் செய்வதன் மூலம் தான் அவர்களின் குறைகளைக் கண்டறிந்து களைவது சாத்தியப்படும்.

மேலும்,சில நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் பிரசாந்த் பூஷண் கூறிய "இந்தியாவுடன் சேர்ந்திருப்பதா வேண்டாமா என காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் முடிவெடுக்க வேண்டும்" என்ற கருத்தினை  நிராகரித்து ,"அது பூஷணுடைய தனிப்பட்டக் கருத்து,ஆம் ஆத்மியின் கருத்தல்ல" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.பூஷணின் கருத்து ஆம் ஆத்மியின் ஆதரவாளர்களால் நிராகரிக்கப்படும் என்பதுடன் அக்கட்சியின் செல்வாக்கையே கணிசமாகக் குறைக்கும் என்பதால் கெஜ்ரிவால் அதை நிராகரித்தார்.இது அவர்களின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குரியதாக்குகிறது.சமூக,பொருளாதார,அரசியல் குறித்த தனது தெளிவான நிலைப்பாடுகளை ஆம் ஆத்மி எடுக்கவேண்டும் மேலும் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஆம் ஆத்மியின் டில்லி வெற்றியை ஆம் ஆத்மியே எதிர்பார்த்திருக்க  வாய்ப்பில்லை.தனக்கான கொள்கைகளை வகுக்கும் முன்னரே வெற்றியைச் சுவைத்துவிட்டது.தற்போது ஆம் ஆத்மியின் வளர்ச்சியை  எல்லோரும் உற்று கவனித்து வருகின்றனர். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னரே ஆம் ஆத்மி தனக்கான கொள்கைக் கோட்பாடுகளை உடனே வகுக்க வேண்டியது கட்டாயமாகிறது.இது போன்ற சில குறைகளை களைந்தால் ஆம் ஆத்மி நம்பிக்கைக்குரிய ஒரு மாற்று கட்சியாக உருவெடுப்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

-  வேனிற்கோ

No comments :

Post a Comment