Saturday, February 22, 2014

இலக்கை நோக்கி..

உறுதியான ஆன்மாக்களுடைய சிறு குழுகூடத் தங்களது நோக்கத்தின் மீது தீராத நம்பிக்கை வைத்திருக்குமானால்,அக்குழுவினரால் வரலாற்றை மாற்ற முடியும்"
-காந்தி 
"அஹிம்சை தான் நமது வழிமுறை என்றால்,எதிர்காலம் பெண்களிடம் தான் இருக்கிறது.ஒரு பெண்ணைத்தவிர வேறு யாரால் இதயத்தைத் தொடும் வலுவான கோரிக்கையை முன்வைக்க முடியும்???"
-காந்தி 
மேற்குறிய காந்தியின் வாக்குகளை மெய்யாக்கி சுமந்து கடந்துள்ளது இந்த வாரம்.

உரிமைக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மக்கள்போராட்டம் எத்தகைய வலிமையுடையது என்பதையும் பறைசற்றும்விதமாக இந்த வாரத்தின் சில நிகழ்வுகள் அமைந்தது.இந்திய அரசியல் வரலாற்றில் இது முக்கியமான் வாரம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்குமான தூக்கு தண்டனை ரத்து,ராஜீவ்  கொலை வழக்கில் கைதான ஏழு பேர் விடுதலை..தெலுங்கானா மசோதா நிறைவேற்றம் போன்ற நிகழ்வுகள் இந்த வாரம் வரலாற்று சிறப்புக்கு உரியதாகிறது.தூக்கு தண்டனை ஒழிப்பில் ஒரு முக்கிய நகர்வு இது.
இந்த வெற்றி சாதாரணாமாக கைக்குக் கிட்டவில்லை பலவருட தொடர்  போராட்டங்கள்,உயிர் தியாகங்கள் மூலமே கிட்டியது.மேலும் "அற்புதம்மாள்" என்ற அந்த அற்புதப் பெண்மணி 23 ஆண்டுகளாக தன் மகனுக்கு நீதி கேட்டு நடத்திய அஹிம்சைப் போராட்டம் உலகின்  தலை சிறந்த போராட்டங்களுள் ஒன்றாகும்.
பொய்யான குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 23 ஆண்டுகள் சிறையில்வாடும் அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் வர்மா கமிஷன்,ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது,அந்த கமிஷனால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப் பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி சில தினங்களுக்கு முன்னர் வாக்குமூலத்தை தாம் சரியாக பதிவு செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.இப்படி பல ஓட்டை உடைசல்கள் இருக்கும் இவ்வழக்கை மீண்டும் விசாரித்து உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

தெலுங்கானா போராட்டமானது .ஐம்பது வருடங்களுக்கு மேல் நடக்கும் உரிமைப் போராட்டம்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும் ஆந்திரா மாநிலத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த பகுதியாகவே தெலுங்கானா இருந்தது.அவர்கள் பெரும் சோம்பேறிகள், அவர்களின் தாய்மொழி தெலுங்குஅல்ல, அவர்கள் முட்டாள்கள், அவர்கள் கிரிமினல்களும்கூட, அவர்களுக்கு படிப்பே வராது, அவர்கள் கலாச்சாரமற்றவர்கள்  - தெலுங்கானா மக்கள் குறித்து ஆந்திராவின் மற்ற பகுதி மக்களின் கருத்து இதுதான்.இப்படி உளவியல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர் தெலுங்கானா மக்கள்.
வேலைவாய்ப்பு ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள்.பெரும் வளர்ச்சியடைந்த நகரமான ஹைதராபாத்தை தன்னகத்தே கொண்டும் தொடர்ந்து  புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டு வந்தது தெலுங்கானா.இப்போது தெலுங்கானா உருவாவதை எதிர்ப்பவர்கள் "பிரிவினையை விரும்பாதவர்கள் எல்லாம் இல்லை" எங்கே ஹைதராபாத் தெலுங்கான பக்கம் போய்விடுமோ என்ற பயத்தில்தான்.
தெலுங்கானாவின் உணவுப் பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், சடங்குகள் வேறாக இருந்தன மேலும்  புறக்கணிப்பு இப்படி ஆந்திராவிலிருந்து வெளியேற அவகளுக்கு பல்வேறு நியாயமான காரணங்கள் இருந்தன.இப்போது தெலுங்கானா உருவாதற்கான மசோதா நிறைவேறியுள்ளது அவர்களின்  தொடர் போராட்டங்களே காரணம்.

இந்த இரு போராட்டங்களும்  முடிவுக்கு வந்துவிட்டதாக கூறமுடியாது.அவர்களுக்கு முழு வெற்றி கிட்டிவிட்டதாகக் கூற முடியாது.ஆனால் அவர்களது போராட்டத்தில்  இது ஒரு இமாலய நகர்வு.தங்களது வெற்றிப்படிக்கட்டில் அவர்கள் முன்னேறுவதற்கான உத்வேகத்தை இது கொடுக்கும்.இன்னும் பல தடைகள் அவர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.ஆனால் இதே முனைப்போடு ஒன்றிணைந்து போராடினால் வெற்றி வெகு தூரமில்லை.

  -வேனிற்கோ

No comments :

Post a Comment